Saradama

எப்படிப்பட்டவள்சாரதை?

Pages1

 

சந்தேகம் ஒரு மனநோய். அது வரும்,போகும். என்னதான் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் நெருங்கிய தோழியாக இருந்தாலும் யோகின்மாவிற்கும் ஒருமுறை அன்னையின் தெய்விகத் தன்மையின் மீதே சந்தேகம் வந்தது.
என்ன இது? குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரோ துறவின் உருவாக வாழ்ந்தார்.அன்னையோ முழுக்க முழுக்க ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாகவே ஆகி விட்டாரே!இரவும் பகலும் தம் தம்பிகளையும் தம்பியின் மனைவி மக்களையுமே குறித்துக் கவலைப்படுகிறார்! என்று நினைத்தார் யோகின்மா.

குருதேவர் மறைந்து சில வருடங்கள் கழித்து யோகின்மாவுக்கு வந்த சந்தேகம் இது.
இத்தகைய சந்தேகம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் யோகின்மா கங்கைக் கரையில் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று குருதேவர் அவர் முன் தோன்றினார்.

குருதேவர், யோகின்மாவிற்கு கங்கையைக் காட்டி, அதோ, கங்கையில் ஏதோ மிதக்கிறதே, பார் என்றார்.
யோகின்மா அங்கே பார்த்தார்.
அங்கே, அப்போதுதான் பிறந்து இறந்த குழந்தை ஒன்று கொடி சுற்றி, ரத்தம் படிய,கங்கையில் மிதந்து சென்றது.
இது என்ன அசிங்கம் என எண்ணி நின்ற யோகினிடம் குருதேவர், இந்த அசுத்தம் கங்கையின் புனிதத்தைக் கெடுத்துவிடுமா? சாரதையும் இப்படித்தான், அவளை ஒரு போதும் சந்தேகப்படாதே. அவளும் இதுவும் (தாமும்)ஒன்றுதான் என்று கூறி மறைந்தார்.

அதிர்ந்துவிட்டார் யோகின்மா.
அன்னையிடம் ஓடிச் சென்று அவர் பாதங்களில் வீழ்ந்தார்.ஏன் யோகின், என்ன ஆயிற்று? என்று பரிவுடன் கேட்டார் அன்னை.

யோகின்மா தழுதழுத்த குரலில், அம்மா, உங்களிடம் நம்பிக்கை இழந்தவளாகி விட்டேன். குருதேவர் வந்துதான் என் சந்தேகத்தை அகற்றினார் என்று நடந்தவற்றைக் கூறினார்.

அன்னை மலர்ந்த புன்னகையுடன், கலங்காதே, சந்தேகங்கள் எழும், பின்னர் தெளியவும் செய்யும். இப்படித்தான் நம்பிக்கை திடப்படும்.பல முயற்சிகளுக்குப் பின்னரே, படிப்படியாக, ஆழ்ந்த, அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படும் என்றார்.

 

Leave a comment